திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
x

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் பூக்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

புதுக்கோட்டை

பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து தம்பதிகள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் இரவில் திரளான பக்தர்கள் பூக்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை எடுத்தும், அம்மன் உருவப்படத்தை அலங்கரித்தும் எடுத்து ஊர்வலமாக மேள, தாளம் முழங்க வந்தனர்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

இதேபோல நகரில் பல்வேறு இடங்களில் இருந்து பூக்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். வருகிற வழியெங்கும் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. வாணவேடிக்கையுடன் ஊா்வலமாக வந்தனர். இதனால் புதுக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது போல இருந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். விடிய, விடிய பக்தர்கள் வருகை தந்தபடி இருந்தனர். கோவிலில் அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி புதுக்கோட்டை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Next Story