திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை  கூடத்தில் பருத்தி ஏலம்
x

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

திருவாரூர்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் அதிகபட்சமாக ரூ.11,899-க்கு விலை போனது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் ஏக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர்.

இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர். தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில் முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். .

விவசாயிகள் மகிழ்ச்சி

இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 899-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 669-க்கும் விலைபோனது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 373-க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.2 கோடியே 1 லட்சம் 592 ஆயிரத்து 996 மதிப்பில் பருத்தி விற்பனையானது. இந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நன்னிலம்

நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது. இதையடுத்து நன்னிலம் அருகே மூங்கில்குடியில் உள்ள பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்றுமுன்தினம் பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலம் திருவாரூர் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்றது. ஏலத்திற்கு நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் 339 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்தனர். இதில் கும்பகோணம், பண்ருட்டி மற்றும் செம்னார்கோவிலை சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.11729-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8609-க்கும் விலை போனது.


Next Story