இளைஞர் திறன் திருவிழா
காங்கயம்:
காங்கயம், தாராபுரம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்றுகாலை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். காங்கயம் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் பல்வேறு துறைகள் மூலம் 16 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த 275 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சிக்கு தேர்வு செய்தனர். இவர்களுக்கு இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. விழாவில் திட்ட இயக்குனர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் கே.கே.துரைசாமி, துணைத்தலைவர் டி.சண்முகம, தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.