முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் தேர் திருவிழா
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிங்கம்புணரி,
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
சிங்கம்புணரி அருகே முறையூர் கிராமத்தில் உள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி மாத தேர்விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆனி தேர் திருவிழா நடைபெறவில்லை. தற்போது 2 ஆண்டு களுக்கு பிறகு ஆனி தேரோட்ட விழா நடக்கிறது. நேற்று காலை 10.30 மணி அளவில் கோவில் குருக்கள் சுரேஷ் குருக்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் பூஜையை தொடங்கினர். அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கொடி கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கொடிக்கம்பத்தில் கொடியை கோவில் கண்காணிப்பாளர் மற்றும் கவுரவ கண்காணிப்பாளர் மற்றும் பூசாரிகள், சாமியாடிகள், கிராமத்து முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு சுரேஷ் குருக்கள் தலைமையில் அருண்குமார சிவம் குருக்களுக்கு ஐதீக முறைப்படி காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கியது.
திருக்கல்யாணம்
10 நாட்கள் நடைபெறும் இந்தவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 8-ந்தேதி நள்ளிரவு கழுவன் திருவிழாவும், 10-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து 11-ந்தேதி தேர் திருவிழா, 12-ந்தேதி பஞ்ச மூர்த்தி புறப்பாடு மற்றும் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.