வட்டார அளவிலான கலைத்திருவிழா


வட்டார அளவிலான கலைத்திருவிழா
x
திருப்பூர்


உடுமலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

கலைத்திருவிழா

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் அறிவுரைப்படி பள்ளி மாணவ-மாணவிகளின் கலைத்திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கலைகள் சார்ந்த கலைத்திருவிழா போட்டிகள் அந்தந்த பள்ளிகள் அளவில் கடந்த வாரம் நடந்தது.

இந்த போட்டிகள் ஒவ்வொன்றிலும் முதலிடம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இன்று தொடங்குகிறது

அதன்படி உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் உடுமலை-தளிசாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (செவ்வாய்க்கிழமை)தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

கடந்த வாரம் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளின் பெயர்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 34 வகையான கலை, இலக்கிய, நடனம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் 6, 7 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மற்றொரு பிரிவாகவும் நடக்கவுள்ளது.

வட்டார அளவிலான கலைத்திருவிழா

இதற்கான ஆலோசனைக்கூட்டம் வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், ஆறுமுகம், மனோகரன் மற்றும் சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் போட்டி நடுவர்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம், போட்டி நடுவர்களுக்கு எடுத்துரைத்தார். போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் கண்ணபிரான், சின்னராசு உள்ளிட்ட ஆசிரியர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story