இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான்:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

திமுக அரசு 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று 2 ஆண்டுகள் சாதனை கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் ஈடில்லா ஆட்சி,ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரையும் வெளியிட்டார். திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்; இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும்.

விமர்சனங்களை பற்றி கவலைப்படமாட்டேன், நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story