இந்த ஆண்டு மழை சராசரி அளவை தாண்டியது


இந்த ஆண்டு மழை சராசரி அளவை தாண்டியது
x

இந்த ஆண்டு மழை சராசரி அளவை தாண்டியது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரியான 1098 மி.மீ. மழை அளவை தாண்டி பெய்துள்ளது. இதுவரை 1108 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில் மழை

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கிய மழை தொடர்ந்து ஒருவாரம் பெய்தது. அதன் பின்னர் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தற்போது மாண்டஸ் புயல் காரணமாகவும் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் அவ்வப்போது லேசான தூறல் காணப்பட்டது. ஆனால் வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

சராசரி மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் ஆண்டு சராசரியாக 1098.21 மி.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தென்மேற்கு பருவமழை மூலம் 318.19 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் 637 மி.மீட்டரும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரையும், வடகிழக்கு பவருமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் வரையும் பெய்யும். ஆனால் தற்போது பருவம் தவறி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜனவரி மாதத்திலும் மழை பெய்து வருகிறது.

கடந்த ஆண்டை விட அதிகம்

கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக பெய்வதை காட்டிலும் கூடுதலாக மழை பெய்தது. அதே போல இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்தது. கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே 463 மி.மீ. அளவை தாண்டி மழை பெய்தது.

அதே போல இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்து வருகிறது.தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதே போல் கடந்த 4-ந்தேதி தமிழகத்திலேயே அதிக பட்சமாக தஞ்சையில் 16 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.

1108 மி.மீ. பதிவு

தற்போது தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1,108.14 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான சராசரி அளவை காட்டிலும் தற்போது வரை 10 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. இந்த மாத இறுதி வரை மழை பெய்யும் என்பதால் இன்னும் கூடுதலாக மழை அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story