தூத்துக்குடி 4-வது ரெயில்வே கேட்வியாழக்கிழமை இரவு முதல் 3 நாட்கள் மூடல்
தூத்துக்குடி 4-வது ரெயில்வே கேட் வியாழக்கிழமை இரவு முதல் 3 நாட்கள் மூடப்படுகிறது.
மதுரை-தூத்துக்குடி இடையே புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மீளவிட்டான் முதல் தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையம் வரை புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் புதிய பஸ் நிலையம் அருகே மாற்றப்படுகிறது. இந்தப் பணியும் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைய உள்ளதால், வருகிற 10-ந் தேதி பெங்களூருவில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதனால் மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்காக ரெயில்வே கட்டுமான பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணி முதல் 8-ந் தேதி காலை 6 மணி வரை 4-வது ரெயில்வே கேட் மூடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் மாற்று பாதையில் வாகனங்கள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.