தூத்துக்குடி இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால் பொதுமக்கள் கடும் அவதி
தூத்துக்குடி இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும், வண்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குடோன்
தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான குடோன் அமைந்துள்ளது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த குடோனில் சேமித்து வைக்கப்படும் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முறையாக மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். அவ்வாறு முறையாக மருந்து தெளிக்க தவறினால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
வண்டுகள் தொல்லை
இந்த நிலையில் இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குடோனுக்கு அருகே உள்ள ஆசீர்வாதநகர், இந்திரா நகர், திரு.வி.க நகர், சங்கர் காலனி, தபால் தந்தி காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டு தொல்லையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி தபால் தந்தி காலனி தெற்கு, ஆசீர்வாதநகர் கிழக்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமையில் கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆகையால் வண்டுகளை கட்டுப்படுத்த உரிய மருந்துகளை தெளிக்க வேண்டும், அல்லது இந்திய உணவுக்கழக குடோனை புறநகர் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.