தூத்துக்குடியில்சனிக்கிழமை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு


தூத்துக்குடியில்சனிக்கிழமை  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு
x

தூத்துக்குடியில் சனிக்கிழமை 7 மையங்களில் நடைபெற உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வை 6 ஆயிரத்து 965 பேர் எழுதுகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை (சனிக்கிழமை) 7 மையங்களில் நடைபெற உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வை 6 ஆயிரத்து 965 பேர் எழுதுகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வு முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதி தேர்வு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை காலை பொதுப்பிரிவினருக்கான முதன்மை எழுத்து தேர்வில் 1377 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 6 ஆயிரத்து 400 பேர் தேர்வு எழுத உள்ளனர். மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு அனைவருக்கும் பொதுவானது என்பதால் பொது ஒதுக்கீடு மற்றும் போலீஸ் துறையினருக்கான ஒதுக்கீடுகளில் விண்ணப்பித்த 1459 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 6 ஆயிரத்து 965 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதே போன்று நாளை மறுநாள் காலை போலீஸ் துறையினருக்கான ஒதுக்கீட்டின்படி விண்ணப்பித்த 104 பெண் விண்ணப்பதாரர்கள் உள்பட 705 பேர் முதன்மை எழுத்து தேர்வு எழுத உள்ளனர்.

மையங்கள்

இந்த தேர்வு தூத்துக்குடியில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடார் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசியார் புரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித மரியன்னை மகளிர் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 7 மையங்களில் நடக்கிறது. இதில் புனித மரியன்னை மகளிர் கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய மையங்களில் பெண் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வுக்காக அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி ஆறுமுகம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன், உதவியாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story