மலைப்பாதையை ஆக்கிரமித்த முட்புதர்கள்
கூடலூர்-குமுளி இடையே மலைப்பாதையை முட்புதர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக-கேரள மாநில எல்லையையொட்டி கூடலூர் நகரம் அமைந்துள்ளது. 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து, தமிழக எல்லையான குமுளி வரை 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை மிகவும் அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. சில இடங்களில் சாலைகள் குறுகலாகவும் உள்ளது. மேலும் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகைகளோ, ஒளிரும் ஸ்டிக்கர்களோ ஒட்டப்படாமல் உள்ளது. தடுப்பு கம்பிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மலைப்பாதையின் இருபுறத்தையும் செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். சிலநேரத்தில் விபத்துகளும் நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை மற்றும் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வர்த்தக போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும் இந்த மலைப்பாதை வழியாக சுற்றுலா வாகனங்களும், ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலித்தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப்களும் சென்று வருகின்றன. எனவே மலைப்பாதையோரத்தில் வளர்ந்துள்ள புதர்களால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.