வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் செல்லுங்கள் - நெல்லை கலெக்டர்


வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் செல்லுங்கள் - நெல்லை கலெக்டர்
x

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் செல்லுங்கள் என்று நெல்லை கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தி உள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உயர் கல்வி படித்த பலர் தாய்லாந்து, மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் அதிக சம்பளத்திற்கு வேலை என்ற பெயரில் வருகின்ற விளம்பரங்களை நம்பி சுற்றுலா விசாவில் சென்று பணி கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது.

எனவே வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன வேலை போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியவில்லை என்றால் தமிழக அரசையோ அல்லது சம்பந்தப்பட்ட நாட்டின் இந்திய தூதரகங்களையோ தொடர்பு கொண்டு, பணி செய்ய போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து வேலைக்கு செல்ல வேண்டும்.

மத்திய அரசின் வெளியூறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும் வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்யும் பணியில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை செயல்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில், தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறையை 9600023645, 8760248625 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story