துறையூர் வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்


துறையூர் வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
x

துறையூர் வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் துறையூர் நரசிங்கபுரம் ஊராட்சி பச்சைமலையில் சட்ட விரோதமாக செம்மண் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது நரசிங்கபுரம் ஊராட்சித்தலைவர் மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் கொலைவெறித்தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

மணல் கடத்தல் கும்பலால் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக்கூறி பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கவேண்டும் எனக்கிராம நிர்வாக அலுவலர்கள் கோரி வரும் நிலையில்தான் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழ்நாட்டில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிப்போர் எந்த அச்சமும் இல்லாமல் வலம் வருகின்றனர். இயற்கை வளங்களைக்காக்க நினைக்கும் அதிகாரிகள்தான் அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

துறையூர் வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபட்டாலோ, அதைத்தடுக்கும் அதிகாரிகள் மீது கை வைத்தாலோ, அரசு எந்திரம் நம்மை சும்மா விடாது என்ற அச்சம் மணல் கொள்ளையர்களுக்கு ஏற்படும் அளவுக்கு இயற்கை வளங்களைக்காக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story