கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் தர்ணா
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தனி மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர்.
இந்த நிலையில் திருக்கட்டளை ஊராட்சியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து வந்திருந்த போது, கலெக்டர் அலுவலக வளாகத்தில் மன்னர் சிலை அருகே திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திருக்கட்டளை ஊராட்சியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு புகார் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதனால் தர்ணாவில் ஈடுபடுவதாகவும் கூறினர்.
கள் இறக்க அனுமதி கோரி...
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு மனு அளித்தனர். இதேபோல மணமேல்குடி அருகே திருநெல்லிவயல் பகுதியை சேர்ந்த முருகையா என்பவர் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி கோரியும், அதில் இருந்து பதநீர், சர்க்கரை தயாரித்து விற்பனை செய்யவும் அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் எச்சரித்து மனு அளிக்க அறிவுறுத்தினர். அதன்பின் அவர் மனு அளித்தார்.
காவிரி-வைகை-குண்டாறு திட்டம்
இதேபோல குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கோரையாற்றில் இணைப்பதற்கு தனியார் மதுபான தொழிற்சாலையை சுற்றி கால்வாயை வெட்ட திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் அந்த மதுபான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அதில் கலக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த திட்டத்தில் கால்வாயை மதுபான ஆலை தொழிற்சாலை வழியாக இல்லாமல் நேரடியாக கோரையாற்றில் இணைக்கும் வகையில் செயல்படுத்த கோரி மனு அளித்தனர்.
இதேபோல பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனர். மனுக்களை பெற்ற தனி மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.