சீனாவில் இருந்து மதுரை வந்தவர்கள்: கொரோனா தொற்றுக்குள்ளான தாய்-சிறுமிக்கு எந்த வகை வைரஸ் பாதிப்பு? -புனேவில் பரிசோதனை செய்ய ஏற்பாடு


சீனாவில் இருந்து மதுரை வந்தவர்கள்: கொரோனா தொற்றுக்குள்ளான தாய்-சிறுமிக்கு  எந்த வகை வைரஸ் பாதிப்பு? -புனேவில் பரிசோதனை செய்ய ஏற்பாடு
x

சீனாவில் இருந்து மதுரை வந்தபோது, கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்-சிறுமிக்கு எந்த வகை வைரஸ் தாக்கி உள்ளது என்பதை அறிய பரிசோதனை மாதிரிகள் புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மதுரை


சீனாவில் இருந்து மதுரை வந்தபோது, கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்-சிறுமிக்கு எந்த வகை வைரஸ் தாக்கி உள்ளது என்பதை அறிய பரிசோதனை மாதிரிகள் புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா பி.எப்.7 வகையை சேர்ந்த வைரஸ், பல்வேறு நாடுகளில் வெகுவேகமாக பரவி வருகிறது. எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சீனாவில் இருந்து நேற்று முன்தினம் இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தாய்-சிறுமி என 2 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளனர்.

புனேவுக்கு அனுப்பி வைப்பு

இந்த நிலையில், அவர்களை எந்த வகை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, ஆய்வுக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், புனேவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, முடிவுகள் வந்த பின்னர் தான், அவர்கள் 2 பேருக்கும் எந்தமாதிரியான கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியவரும்.

அந்த பெண், சீனாவில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில்தான் அங்கிருந்து, சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். எனவே, அவருடைய மாதிரிகள் மிகவும் கவனமாக பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. ஆய்வு முடிகள் வரும் வரை அவர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்.

மேலும், அவருடன் பயணித்து மதுரை வந்த மற்ற பயணிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் வந்தவர்களில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களில் வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. ஒருவேளை யாருக்கேனும் பாதிப்பு உறுதியானால், அவர்களின் பரிசோதனை மாதிரிகளும் புனேவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story