தூய்மை பணியை சரியாக செய்யாதவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்


தூய்மை பணியை சரியாக செய்யாதவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்
x

தூய்மை பணியை சரியாக செய்யாதவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

தூய்மை பணியை சரியாக செய்யாதவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:- கவுன்சிலர் இந்திராணி:- கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பேச உரிய வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. கவுன்சிலராக பதவியேற்று 9 மாதங்கள் ஆகியும், வார்டில் அடிப்படை பணியை மேற்கொள்ள எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்க வேண்டும்.

சசிகலா:- மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. பாலம் அமைக்க ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் பில்லர் மட்டுமே கட்ட முடியும்.

தூய்மை பணிகள்

சூர்யா:- மாநகராட்சி அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அலுவலகத்தில் மின் தூக்கி (லிப்ட்) அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது தேவையற்றது.

தங்கப்பாண்டியம்மாள்:- மாநகராட்சியில் குப்பை வண்டி இல்லாததால், தெருக்களில் எங்கு பார்த்தாலும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

ஞானசேகரன்:- மாநகராட்சியில் 400 பணியாளர்கள் இருந்தும் நகரில் தூய்மை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பணிகளை சரியாக செய்யாதவர்களை ஆணையாளர் இடமாற்றம் செய்ய வேண்டும்.

இதனைத்தொடர்ந்து கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஆணையாளர் பதிலளித்து பேசினார்.

கவுன்சிலர்கள் புகார்

கூட்டத்தில் மேயர் சங்கீதா இன்பம் பேசுகையில், நூற்றாண்டு நிதி வருவதில் ஏற்படும் தாமதத்தால் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு பின் நிலைமை சரியாகி விடும். பணிகள் விரைவு பெறும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகாசி மாநகராட்சி தெருக்களில் குவிந்துள்ள குப்பைகள், குடிநீர் பிரச்சினை, சேதமான சாலை உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடத்தில் கெட்ட பெயர் ஏற்படுவதாக மாநகராட்சி கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.


Next Story