என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்து வேலை இழந்தவர்கள் திடீர் தர்ணா
என்.எல்.சி. 2-வது சுரங்கத்தின் முன்பு வீடு, நிலம் கொடுத்து வேலை இழந்த தொழிலாளர்கள் வேலை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஊதிய உயர்வு கேட்டு நிர்வாக அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மந்தாரக்குப்பம்
ஒப்பந்த தொழிலாளர்கள்
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத்த கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், மனகதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக 17 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் அவர்களை என்.எல்.சி. நிர்வாகம் வேலையிலிருந்து நிறுத்திவிட்டது. இதன் பின்னர் ஒப்பந்ததாரரிடமும், என்.எல்.சி. நிர்வாகத்திடமும் பலமுறை வேலை கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
தர்ணா போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை என்.எல்.சி. 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு அவர்களை என்.எல்.சி. அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களுடைய கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தகவல் தெரிவிக்கிறோம் என்றனர். இதை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து குடும்பத்தினருடன் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஊதிய உயர்வு கோரி
அதேபோல் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி என்.எல்.சி. 2-வது சுரங்கத்தின் நிர்வாக அலுவலகம் முன்பு 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய என்.எல்.சி. அதிகாரிகள் உங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள், அதை உயர் அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நெய்வேலி 2-வது நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, நிலம் கொடுத்து வேலைக்கு சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்களை தற்போது வேலை இல்லை என கூறி அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி விட்டது. இந்த சூழ்நிலையில் சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக என்.எல்.சி. அதிகாரிகள் உரிய உபகரணங்களுடன் நேற்று காலை மேற்படி கிராமங்களுக்கு சென்றனர். அப்போது அவர்கள், கிராம மக்களிடம் நீங்கள் வீடு, நிலம் கொடுங்கள் உங்களுக்கு வேலை வழங்குகிறோம் என்றனர். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மக்கள் ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே வேலை வழங்க முடியாமல் இருக்கும் நீங்கள் எங்களுக்கு எப்படி வேலை தருவீர்கள்? என்று கூறி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். உடனே அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.