கடலூர் அருகேதனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 10 பேர் கைது
கடலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 10 பேர் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சத்திரம்,
புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டில் தனியார் தொழிற்சாலையில், நேற்று அதிகாலை 10 பேர் கொண்ட கும்பல், லாரி, கார், வேன், சரக்கு வாகனம் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களில் அந்த தொழிற்சாலையின் புத்திரவள்ளி தென்பக்க நுழைவு வாயில் பகுதி வழியாக உள்ளே புகுந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கு கிடந்த இரும்பு பொருட்களை திருடி வாகனங்களில் ஏற்றிக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.
இதை பார்த்த தொழிற்சாலையின் தொழில்முறை ஆலோசகரான சுவாமிநாதன் மற்றும் காவலாளிகள் அந்த கும்பலை மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் கடலூர் சுப்பமாசத்திரத்தை சேர்ந்த சங்கர் என்கிற சுப்பமாசத்திரம் சங்கர் (வயது 52), ஆலப்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் (44), சிவநாராயணன் (35), கணேசன் (40), ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த ஜெகன்நாதன் (23), ராமர் (23), பாண்டியராஜன் (28), மோகன்ராஜ் (24), சின்ன பிள்ளையார்மேடு முத்து (26), செல்லாங்குப்பம் பிரதாப் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரி, வேன், கார் உள்ளிட்ட 10 வாகனங்களும், திருடிய 3½ டன் இரும்பு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.