நடைபயணம் மேற்கொள்ள முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்
நடைபயணம் மேற்கொள்ள முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசமரம் அருகில் மற்றும் பழைய நீதிமன்றம் அருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளை அகற்றக்கோரி தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 4 மாதங்களில் கடைகளை அகற்றப்படும் என்று அதிகாரிகள் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதனை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளை கண்டித்து ஆலங்குடி பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணம் சென்று மனு கொடுப்பது என சமூக ஆர்வலர் முருகேசன் மற்றும் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் ஆலங்குடி பஸ் நிலையத்தில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நடைபயணம் மேற்கொள்ள இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடைபயணத்திற்கு செல்ல கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சமூக ஆர்வலர் முருகேசன், தாசில்தாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், தாசில்தார் ஓரிரு நாட்களில் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு செய்யப்படும் என்று கூறினர். இதைதொடர்ந்து இதற்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் நாங்கள் சைக்கிள் பேரணியாகவோ அல்லது சென்னைக்கு சென்று அங்கிருந்து நடைபயணம் செய்து கவர்னரிடம் எங்களது கோரிக்கை மனுவை அளிப்போம் என்று முருகேசன் கூறினார். இதையடுத்து அவர்களது நடைபயணம் கைவிடப்பட்டது.