ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி நேர்த்திக்கடன்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி ெபாங்கல் விழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி ெபாங்கல் விழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொங்கல் திருவிழா
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வைபவம் நடைபெற்றது.
அதிகாலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் மஞ்சள் ஆடை உடுத்தி கையில் அக்னிசட்டி ஏந்தி ஆஹோ அய்யஹோ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டபடி கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பறவை காவடி
21 அக்னிச்சட்டி, பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். உடலில் அலகுகுத்தி, தேர் இழுத்து வந்தது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. மஞ்சள் போர்வை அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தர்களும், அவர்களுடன் வந்தவர்களும் மஞ்சள் ஆடை உடுத்தி வந்தததால் நகரமே மஞ்சள் போர்வை போர்த்தியது போன்ற தோற்றம் ஏற்பட்டது.
அனைத்து தெருக்களுமே மாரியம்மன் கோவிலை நோக்கி செல்வது போன்று இருந்தது. தம்பதியர் கரும்புத் தொட்டிலில் தங்கள் குழந்தையை இட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோவிலில் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினர். மொத்தத்தில் நேற்று நகரமே பக்தி பரவசத்தில் ஆழ்ந்தது.