தொழிலதிபரிடம் ரூ.1½ கோடி கேட்டு மிரட்டல்; நிதி நிறுவன அதிபர் மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ.1½ கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம் பிருந்தாவன் ரோடு ரமணி சாலை 8-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர், கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி கருமண்டபம் கல்யாண் சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரான கிருஷ்ணராஜிடம் ரூ.25 லட்சம் கடனாக பெற்றார். இதற்காக சுரேஷ் வங்கி காசோலை, உறுதிமொழி பத்திரங்கள் மற்றும் சொத்து ஆவணங்களை அடமானமாக கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியதாகவும், ஆனால் கிருஷ்ணராஜ் அடமானமாக பெற்ற வங்கி காசோலை, உறுதிமொழி பத்திரம் மற்றும் சொத்து ஆவணங்களை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பின்னர் மேற்கண்ட கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 50 லட்சம் தர வேண்டும் என்று போலி ஆவணம் தயாரித்து, சுரேசை அவர் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் சுரேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் நிதி நிறுவன அதிபர் கிருஷ்ணராஜ் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய சண்முகம், ராஜா ஆகிய 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.