பொதுமக்களை அச்சுறுத்திய 31 நாய்கள் பிடிபட்டன


பொதுமக்களை அச்சுறுத்திய 31 நாய்கள் பிடிபட்டன
x

நெல்லை டவுன் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய 31 நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய 31 நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.

தெரு நாய்கள் தொல்லை

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை டவுன், சந்திப்பு, மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் வாகனங்களில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் அச்சுறுத்தி வருகின்றன. நாய்கள் கடித்து பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை டவுனில் நாய்கள் கடித்து 30 பேர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

31 நாய்கள் பிடிபட்டன

இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

அதன்பேரில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் வழிகாட்டுதல்படி, சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் முருகன், பாலமுருகன், பணியாளர்கள் திவாகர், மணிகண்டன் ஆகியோர் நேற்று நெல்லை டவுன் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகர பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்தால் அதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டவுன் 16-வது வார்டுக்கு உட்பட்ட சாலியர் தெரு, நல்ல முத்தம்மன் கோவில் தெரு, அக்கசாலை விநாயகர் கோவில் தெரு, கருவேலங்குன்று தெரு, குற்றாலம் ரோடு, லாலுகாபுரம், கண்டியப்பேரி உழவர் சந்தை மற்றும் அதன் சுற்று வட்டார தெருக்களில் சுற்றித்திரிந்த 31 நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் வலை விரித்து பிடித்தனர். அந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. நாய் பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே நெல்லை டவுன் நயினார்குளம் சாலையையொட்டி உள்ள கழிவுநீர் ஓடையை தூர்வாரும் பணி நடந்தது.


Next Story