அச்சுறுத்தும் வனவிலங்குகள்
பயிர்களை சேதப்படுத்தும் யானைக்கூட்டம்- அச்சுறுத்தும் வனவிலங்குகள்- தீர்வு ஏற்படுவது எப்போது? என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்
இயற்கை அன்னை நம் தாய் திருநாட்டுக்கு கொடுத்த அற்புதமான கொடைகளில் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை. நம் ஊரில் நெல்லை மாவட்டத்தில் பணகுடி அருகே தொடங்கி, தென்காசி மாவட்டத்தில் சிவகிரி வரை அது பரவி கிடப்பதும் நமக்கு சிறப்பு.
முண்டந்துறை புலிகள் காப்பகம்
அழகு கொட்டிக்கிடக்கும் இந்த மலையில் இரு மாவட்டங்களிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் 1,601 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்மண்டலமாக திகழ்கிறது. பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் முதல் தெற்கு வீரவநல்லூர் வரை களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகவும், வீரவநல்லூர் முதல் கடையம் வரை முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியாகவும் அமைந்துள்ளது.
இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 36 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு அடங்கி இருக்கிறது. இது சிங்கவால் குரங்கு, யானை, சிறுத்தை, கரடி, மான், நரி, பன்றி, முள்ளம்பன்றி, உடும்பு, ராஜநாகம், மலைப்பாம்பு உள்ளிட்ட எண்ணற்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்கின்றன.
கடித்துக்குதறிய கரடி
வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் ேதாட்டத்தில் புகுந்து, விவசாயிகள் கண்மணி போல் பராமரித்து வளர்க்கும் பயிர்களையும் சேதப்படுத்தி சென்று விடுகின்றன. அரிதாக சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையம் அருகே உள்ள கடனாநதி அணை செல்லும் ரோட்டில் வலம் வந்த ஒரு கரடி, அந்த வழியாக சென்ற 3 பேரை கொடூரமாக கடித்து குதறிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், கடையம், கடையநல்லூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்தில் புகுந்து வாழை, நெல், தென்னை போன்ற பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளால் விவசாயிகள் அல்லல்பட்டு வருகின்றனர்.
தொடர் கதை
கடையநல்லூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் நடமாடுவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி விட்டது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட தென்னை, வாழைகளை நாசம் செய்து இருப்பதுடன் சோலார் மின்வேலி போன்றவற்றையும் சேதப்படுத்தி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலத்துக்குள் வனவிலங்குகள் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட சோலார் மின்வேலி சேதம் அடைந்து இருப்பதாலும், அகழிகள் தூர்ந்து கிடப்பதாலும் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அவற்றை தாண்டி எளிதாக விளைநிலங்களில் புகுந்து கோரத்தாண்டவம் ஆடி விடுகிறது.
தீர்வு எப்போது?
இதற்கு நிரந்தர தீர்வு தான் எப்போது? என்று ஏங்கும் விவசாயிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வேதனையுடன் விவரித்தனர். அதுபற்றி இங்கு பார்ப்போம்.
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை சேர்ந்த சில்க்கிஸ் சாமுவேல்:- நான் வடக்கு பச்சையாறு அணை பாசன பகுதியில் அமைந்துள்ள விளைநிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். எனது விவசாய நிலத்தில் பன்றி, கடமான் போன்ற விலங்குகள் அடிக்கடி புகுந்து வாழை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாய நிலத்தை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைத்திருந்தாலும் அதையும் தகர்த்து விட்டு சென்று அட்டகாசம் செய்கின்றன. சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க தாமதம் ஆகிறது. பயிர்களை பாதுகாக்க இரவில் தோட்டத்தில் தங்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது சில நேரங்களில் ஆபத்துகளை சந்திக்கவும் நேரிடுகிறது. நாங்கள் 'டார்ச் லைட்' அடிக்கும்போது காட்டு பன்றிகள் ஒளியை நோக்கி பாய்ந்து வந்து எங்களை தாக்க முற்படுகின்றன. வாழை பயிரிடுவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டி இருப்பதால், வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முழுமையாக விவசாயம் பலன் தந்தால் தான் கடனை திருப்பி செலுத்த முடியும். இல்லாவிட்டால் பெரும் நஷ்டம் தான் ஏற்படும்.
குறைவான நிவாரணம்
விக்கிரமசிங்கபுரம் வேம்பையாபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி:- வேம்பையாபுரம், திருப்பதியாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை, காட்டுப்பன்றி தினமும் இரவு நேரங்களில் மலையடிவார பகுதிக்கு வருகின்றன. காட்டுப்பன்றிகள் வாழையை நடவு செய்ததில் இருந்தே கீழே தள்ளுகிறது. சேதம் அடையும் வாழைக்கு நிவாரணமாக குறைந்த பணத்தை தான் வனத்துறையினர் தருகின்றனர். ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பெரிய ஆட்டை சிறுத்தை தூக்கி சென்றால் ரூ.3 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. ஆட்டு குட்டிகளை தூக்கி சென்றால் அந்த நிவாரணமும் கிடைப்பதில்லை. நெற் பயிகளை பன்றிகள் சேதப்படுத்தியதற்கு இதுவரை நிவாரணம் தரவில்லை.
தென்னக நதிகள் இணைப்பு மாநில செயலாளர் ஜாகீர்உசேன்:-
அகழி மற்றும் நவீன மின்வேலிகள் அமைத்தும், யானைகளுக்கு தேவையான உணவுகள் அளிப்பதன் மூலமும் அவை வனப்பகுதியில் இருந்து விளைநிலத்தில் புகாமல் தடுக்க வேண்டும். மேக்கரை வனப்பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக தனியார் நிலங்களில் 'ரிசார்ட்டுகள்' கட்டப்பட்டு ஆற்றையும், வனப்பகுதியில் இருந்து வரும் ஓடையையும் மறித்து அருவிகள் உருவாக்கப்பட்டதன் எதிரொலியாக வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு மற்ற மாவட்டங்களை போல் தென்காசி மாவட்டத்திலும் அனுமதிக்க வேண்டும். வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினரை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் உரிய கருவிகள் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி
கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ராபி பருவத்தில் நிலக்கடலை, உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், சோளம், மல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர், கோவில்பட்டி அருகே குருமலை, கழுகாசலபுரம், ஊத்துப்பட்டி, குமாரபுரம், எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி, ராமனூத்து, ராசாபட்டி, முத்துலாபுரம், நம்பிபுரம், முதலிபட்டி, வீரப்பட்டி, தாப்பாத்தி, வடமலாபுரம், மேலக்கரந்தை, மாவில்பட்டி, அயன் ராஜாபட்டி, விளாத்திகுளம் தாலுகா வவ்வால்தொத்தி, புதுப்பட்டி, துரைச்சாமிபுரம், தொப்பம்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக காட்டுப்பன்றி, மான், நரி உள்ளிட்டவை மக்காச்சோளம், நிலக்கடலை, சோளம், சீனிக்கிழங்கு ஆகியவற்றை இரவு நேரங்களில் கூட்டமாக வந்து தின்றும், சேதப்படுத்தியும் செல்கின்றன. இதனால் இரவு நேரங்களில் தோட்டங்களில் காவல் இருக்க வேண்டி உள்ளது.
ஏற்கனவே இந்தாண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அதோடு மான், பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதும் அவர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எனவே, சேதம் அடைந்த பயிர்களை வனத்துறை, வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வனவிலங்குகள் விளைநிலத்தில் புகாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராபி பருவத்தில் நிலக்கடலைக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.