கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு:வாலிபர் கைது
பெரியகுளம் அருகே கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க வந்தார். பின்னர் அவர் ஊருக்கு செல்வதற்காக கைலாசப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் நந்தகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து அவர் கூச்சல்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தென்கரை போலீசில் நந்தகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நந்தகுமாரிடம் செல்போன், பணத்தை பறித்து சென்றது கைலாசப்பட்டியை சேர்ந்த ரூபன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.