ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு: கடலூரை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை


ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு: கடலூரை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில், ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற வழக்கில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கதிரவன் (வயது 38). கடலூர் ஊரக வளர்ச்சித்துறையில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் பாரதிசாலையில் உள்ள சினிமா தியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன், 500 ரூபாயையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

வலைவீச்சு

இதே போல் கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலமுருகன் (48) என்பவரும் வேலை முடிந்து இம்பீரியல் சாலையில் இருந்து சைக்கிளில் அதிகாலை வீட்டுக்கு சென்றார். அவரையும் 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றது. அவர் செல்போனை கொடுக்காததால் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டது.

இது பற்றி கதிரவன் கடலூர் புதுநகர் போலீசிலும், பாலமுருகன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

வாகன சோதனை

இது தவிர கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மேற்பார்வையில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, திருப்பாதிரிப் புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், கணபதி, தவச்செல்வம் மற்றும் தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்நிலையில் நேற்று மாலை கடலூர் புதுநகர் போலீசார் குண்டுசாலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 3 சிறுவர்கள் நடந்து வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

3 பேர் கைது

அப்போது அவர்கள் புதுச்சேரி திலாசுபேட்டை, சண்முகாபுரம், வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 3 பேர் என்றும், அவர்கள் தான் குடிபோதையில் கடலூருக்கு வந்து, ஆடம்பர செலவு செய்வதற்காக வழிப்பறி மற்றும் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.500-ம் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒரு அடி, தடி வழக்கு உள்ளது.

மேலும் அவர்களுக்கு வேறு போலீஸ் நிலையங்களில் ஏதேனும் வழக்கு உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இருப்பினும் கடலூரை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வரும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story