மாணவியின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டல் என்ஜினீயர் கைது
கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
புதுக்கடை முள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் ஆல்பின் (வயது 27), என்ஜினீயர். இவருக்கும், கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2 பேரும் காதலிக்க தொடங்கினர். தினமும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
ஆனால் ஆல்பினின் நடவடிக்கை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருடனான காதலை மாணவி கைவிட்டுள்ளார். இருந்த போதிலும் ஆல்பின் அவரை விடவில்லை. தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு நடந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆல்பின், காதலித்த போது எடுத்த மாணவியின் ஆபாச புகைப்படத்தை இணையதளங்களில் பதிவிடுவதாக கூறி மிரட்டியதாக தெரிகிறது.
கைது
அதோடு மாணவியின் தங்கையையும் செல்போனில் அழைத்து "உன் அக்காவின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு விடுவேன்" என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து சைபர் கிரைம் போலீசுக்கு ஆன்லைன் மூலம் புகார் செய்தார். அந்த புகார் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக ஆல்பின் மிரட்டியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஆல்பினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.