தொழிலாளி வீட்டில் பொருட்களை சேதப்படுத்தி கொலைமிரட்டல்
தூத்துக்குடியில் தொழிலாளி வீட்டில் பொருட்களை சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி, குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம்
தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள். இவருக்கும், தூத்துக்குடி தொம்மையார் காலனியைச் சேர்ந்த தொழிலாளி மாடசாமி குடும்பத்திற்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து மாடசாமியின் மகன்கள் ஆறுமுகம் (32), சொர்ணராஜ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த 17.9.2021 அன்று சிவபெருமாளை வெட்டிக் கொலை செய்தனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இருந்த பகை மேலும் வளர்ந்தது.
நேற்று முன்தினம் மாலையில் மையவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சொர்ணராஜ் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் பாலமுருகன் (25), ஆசீர்வாத நகரைச் சேர்ந்த பால்பாண்டி மகன் பிருதிவிராஜன் (24), டி.எம்.பி காலனியைச் சேர்ந்த கண்ணன் மகன் விஜயகுமார் (23), புதியம்புத்தூர் கீழ அரசரடியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் கரன்குமார் (23), ராஜீவ் நகர் 9-வது தெருவைச் சேர்ந்த முத்துவேல் மகன் திருமணிராஜன் என்ற வில்லியம் (23) ஆகியோருக்கும், சொர்ணராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து சொர்ணராஜ் சென்று விட்டாராம்.
5 பேர் கைது
இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் உள்ளிட்ட 5 பேரும் மாடசாமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பீரோ மற்றும் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி, அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார்களாம். இதுகுறித்து மாடசாமியின் மனைவி வெள்ளையம்மாள் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து, பாலமுருகன், பிருதிவி ராஜன், விஜயகுமார், கரண்குமார், திருமணிராஜன் என்ற வில்லியம் ஆகிய 5 பேரையும் கைது செய்தார்.