மகாதேவ மலையில் முப்பெரும் விழா
மகாதேவ மலையில் தமிழ் புத்தாண்டையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் மகாதேவ மலையில் தமிழ் புத்தாண்டு, மகானந்த சித்தருக்கு பக்தர்கள் திருநீறு அர்ப்பணித்தல், பெரிய தேர் மலை வலம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சிவகாமி அம்மன் உடனுறை மகாதேவ சுவாமி, விநாயகர், முருகர், மகிஷாசுரமர்த்தினி, ஆஞ்சநேயர், காளி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
மலை மீது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிவலப் பாதையில், பெரிய தேர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை மகானந்த சித்தர் தொடங்கி வைத்தார். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மகானந்த சித்தர் தேரில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருளாசி செய்து, பிரசாதம் வழங்கினார்.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் புத்தாண்டு அன்று மகானந்த சித்தர் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அது நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு முதல் மகானந்த சித்தருக்கு பக்தர்கள் திருநீறு அர்ப்பணித்து, ஆசி பெறும் நிகழ்ச்சியாக மாற்றி அமைக்கப்பட்டது. இரவு வாண வேடிக்கையுடன் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக குடியாத்தம், ஆற்காடு, காட்பாடி, வேலூர் பகுதிகளில் இருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
விழாவில் மகாதேவமலை மகானந்த சித்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் கே.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.