தஞ்சை கோர்ட்டில் மேலும் 3 பேர் சரண்
தஞ்சையில் வாலிபர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண்அடைந்தனர். 3 பேரை தஞ்சை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர், ஜூன்.25-
தஞ்சையில் வாலிபர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண்அடைந்தனர். 3 பேரை தஞ்சை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
கூலி தொழிலாளி
தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் மனோகரன் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று மனோகரனை, சிலர் சேவப்பநாயக்கன்வாரி பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவர்கள் மது அருந்தினர்.பின்னர் மனோகரனை, மோட்டார்சைக்கிளில் அவர்கள் கடத்திச்சென்று அவரை கொலை செய்து பிணத்தை ஆற்றில் வீசினர். மனோகரன் உடலை, தஞ்சை மேற்கு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடத்தல் வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
இந்த நிலையில் கொலை சம்பவம்தொடர்பாக தேடப்பட்டு வந்த தஞ்சை சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த இளநீர்மணி என்ற மணிகண்டன், உமாமகேஸ்வரன், தினேஷ் ஆகிய 3 பேர் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.மேலும் இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மனோகரன் கொலை தொடர்பாக தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார், தஞ்சை சேவப்பநாயக்கன் வாரி நடுக்குளம் 2-ம் தெருவை சேர்ந்த தனபால் மகன் சக்தி (20), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மகன் கார்த்திக் (20), அர்ஜூனன் மகன் அஜித்குமார் (24) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
மேலும் 3 பேர் சரண்
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்த துரை மகன் விஜய் (30), சேவப்பநாயக்கன்வாரி வடகரையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்குமார் (25), அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் நடராஜ் (21) ஆகியோர் தஞ்சை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் சரண் அடைந்தனர்.