பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம்பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடன் உதவி
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர்கடன், பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு வணிகக் கடன் மற்றும் புதிய பொற்கால திட்டம், ஆண்களுக்கான சிறுவணிக கடன், கறவை மாட்டுக் கடன் மற்றும் புதிய கடன் திட்டங்களின் கீழ் இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க கடன் திட்டம், மரபுசார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறுகுறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் ஆகியவை ரூ.15 லட்சம் வரை 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
தகுதிகள்
இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனத்தில் இருந்து விலைப்புள்ளி மற்றும் திட்டதொழில் அறிக்கை (ரூ.1 லட்சத்துக்கு மேல்) சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம்
மேலும் கடன் தொகைக்கு ஏற்ப உரிய ஜாமீன் வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.