இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம்ஓய்வூதியதாரர்களின் வீடுகளில்மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும்:தபால் அதிகாரி தகவல்


தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியதாரர்களின் வீடுகளில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும் என்று தபால் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியதாரர்களின் வீடுகளிலேயே மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும் என்று தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி

தபால் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம், அனைத்து மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை நேரடிப்பலன் பரிமாற்றங்களின் கீழ்பெறலாம். பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகளுக்கு சேவை செய்வதே வங்கியின் முக்கிய நோக்கம் ஆகும். ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டுவாசலில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும். மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஜீவன் பிரமானின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர்கள் மூலம் இந்தச் சேவைகளைப் பெறலாம்.

ஆதார் சேவை

தபால்காரர்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் ஆதார் சேவைகள் அளிக்கும் வசதியைப் பெற்று உள்ளனர். இதன் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வது, செல்போன் எண்களைப் புதுப்பிப்பது, சேர்ப்பது போன்ற சேவைகளை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே வழங்க முடியும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ரூ.399 மற்றும் ரூ.396-ல் விபத்துக் காப்பீடு அறிமுகப்படுத்தி உள்ளது. இது விபத்தின் மூலம் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளை ஈடுசெய்வதற்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டம். இதன் மூலம் விபத்துகளினால் ஏற்படும் இழப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறமுடியும். மூத்தகுடிமக்களுக்கு சேவை செய்வதற்காக, 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த தொகையை தபால்காரர்கள் மூலம் அவர்களின் வீட்டிலேயே இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்குகிறது. ஆகையால் அனைத்து பொதுமக்களும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story