இந்திய தூதரகங்கள் மூலம் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை அறிந்து வெளிநாட்டு வேலைக்கு செல்லுங்கள் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


இந்திய தூதரகங்கள் மூலம்  நிறுவனங்களின் உண்மைத்தன்மையை அறிந்து வெளிநாட்டு வேலைக்கு செல்லுங்கள்  பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x

இந்திய தூதரகங்கள் மூலம் வேலைக்கு செல்லும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை அறிந்து வெளிநாட்டுக்கு செல்லுங்கள் என பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர்

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்பக் கல்வி பயின்ற மாணவ- மாணவிகளை குறிவைத்து தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ' டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் " வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் ஏமாற்றி, அவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்படுன்கிறனர். பின்னர் கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், இப்பணிகளை செய்ய மறுக்கும் நபர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதனால் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர், ஒன்றிய அரசில் பதிவு செய்த முகவர்கள் மூலம், செல்லும் வேலைக்கான விசா, நிறுவனத்துடன் முறையான பணி ஒப்பந்தம், செல்லும் இடத்தில் மேற்கொள்ளக்கூடிய பணி விவரம் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு பணிக்கு செல்ல வேண்டும்.

உண்மை தன்மை

பணிகள் குறித்த விவரங்களை முழுமையாக அறிய இயலவில்லை என்றால், தமிழ்நாடு அரசு அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அல்லது வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். மேலும், உதவிகள் தேவைப்படின், தமிழ்நாட்டில் அயலகத் தமிழர் நலன் காக்க செயல்படும், அயலகத் தமிழர் நலத்துறையின் தொலைபேசி எண் 044-28515288 மற்றும் 96000 23645, 8760248625 ஆகிய எண்களை பயன்படுத்தி தேவையான உதவிகளை பெறலாம்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story