நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 'கியூஆர் கோடு' மூலம்பணம் செலுத்தும் வசதி
தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கியூஆர்கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி
தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கியூஆர்கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
மத்திய அரசு 'டிஜிட்டல்' முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2017-18-ம் நிதியாண்டில் ரு
ரூ.2,071 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள் 2021-22-ம் நிதியாண்டில் ரூ. 8,840 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்தது.
2022-23-ம் நிதியாண்டை பொருத்தவரை டிசம்பர் 31, 2022 வரை ரூ.9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய அளவிலான கடைகளில் கூட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக கியூஆர்கோடு அட்டைகள் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக நடைபாதை கடைகளில் கூட இந்த வசதி வந்துவிட்டது. இதை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.
இதேபோல் கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக 'டாக் பே' என்ற பெயரில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக கியூஆர்கோடுகளை தபால் துறை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ரேசன் கடைகளில் கியூஆர்கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி கூறியதாவது:-
கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி
தனியார் வணிக நிறுவனங்களில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்துவது போல் ரேஷன் கடைகளிலும் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 403 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 29 கடைகள் மற்றும் மகளிர் அமைப்புக்கு சொந்தமான 26 கடைகள் மற்றும் எஸ்டேட்டுகளில் உள்ள 10 கடைகள் என 65 கடைகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் ஆய்வு முடிவுகளை பொறுத்து மேலும் மற்ற கடைகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். இதில் அனுப்பப்படும் பணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் மகளிர் கடைகளுக்கு உள்ள தனித்தனி வங்கிக் கணக்குகளுக்கு சென்று விடும். சில நேரங்களில் ரேஷன் கடைகளில் பணம் செலுத்தும் போது 96 ரூபாய் அல்லது 107 ரூபாய் என்று சில்லறை தொகையாக வரும். அப்படிப்பட்ட சமயங்களில் இந்த முறை மிகவும் உதவிகரமாக இருக்கும். நகர் பகுதியில் உள்ள கடைகளில் இதன் மூலம் பணம் செலுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கிராமப்புற மக்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த முறை பொது மக்களுக்கு அதிகமாக பயன்பட்டால் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.