2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலத்தில் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
சேலத்தில் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
வழிப்பறி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வி.வி.லைவ் வீதியை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மகன் மாசிலாமணி (வயது 28). சேலம் மாவட்டம் ஓமலூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் சூர்யா (22). இவர்கள் இருவரும் சேர்ந்து ஜங்ஷன் புதுரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை மிரட்டி ரூ.1,100-ஐ பறித்துக்கொண்டனர். இது குறித்து சந்தோஷ் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசிலாமணி, சூர்யா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் தடுப்பு சட்டம்
போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் சேர்ந்து சூரமங்கலம் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு இடங்களில், வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் மத்திய சிறையில் உள்ள மாசிலாமணி, சூர்யா ஆகிய 2 பேரிடம் போலீசார் வழங்கினர்.