சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம்
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
16 வயது சிறுமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த மே மாதம் 1-ந்தேதி வேலைக்கு சென்ற சிறுமி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் தாய் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கடத்தப்பட்டது தெரியவந்தது.
பாலியல் பலாத்காரம்
மேலும் விசாரணையில், சிறுமியிடம் மிஸ்டுகால் மூலம் பழகிய வேலூரை சேர்ந்த முபாரக் அலி (வயது 32) மணப்பாறைக்கு வந்து சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெங்களூருவுக்கு கடத்திச்சென்றுள்ளார்.
அங்கு அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பெங்களூருவில் உள்ள வேலூரை சேர்ந்த நியாஸ் (32), சதாம் உசேன் (34) ஆகியோரிடம் விட்டு விட்டு வேலூர் வந்துள்ளார். பின்னர் அவர்களும் அந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
குண்டர் சட்டத்தில் கைது
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார், அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது நியாஸ் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகியாக பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் நியாஸ், சதாம்உசேன், முபாரக் அலி ஆகியோர் தொடர் குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதனால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தி்ல் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் நியாஸ், சதாம்உசேன், முபாரக் அலி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.