முதுமலை தெப்பக்காட்டில் மீண்டும் புலி நடமாட்டம்-ஆதிவாசி மக்கள் அச்சம்
பெண்ணை கடித்து கொன்ற நிலையில் முதுமலை தெப்பக்காட்டில் புலி நடமாட்டம் மீண்டும் காணப்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் அச்சமடைந்தனர்.
கூடலூர்
பெண்ணை கடித்து கொன்ற நிலையில் முதுமலை தெப்பக்காட்டில் புலி நடமாட்டம் மீண்டும் காணப்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் அச்சமடைந்தனர்.
மீண்டும் புலி நடமாட்டம்
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் யானைப்பாடி, லைட்பாடி, தேக்கு பாடி ஆதிவாசி கிராமங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் வனப்பகுதிக்கு சென்று விறகுகள் சேகரித்து வருகின்றனர். கடந்த மாதம் 31-ம் தேதி யானைப்பாடி பகுதியை சேர்ந்த மாரி என்ற பெண் விறகு சேகரிக்க வனத்துக்குள் சென்றார்.
அப்போது மறைந்திருந்த புலி மாரியை கடித்து கொன்றது. தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக 41 இடங்களில் வனத்துறையினர் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு புலி ஒன்று பாய்ந்து ஓடுவதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதை கண்ட ஆதிவாசி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அனைவரும் வீடுகளை விட்டு தனியாக எங்கு செல்லக்கூடாது என வன அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அடையாளம் காணும் பணி
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- பெண்ணை கொன்ற இடத்தில் புலியின் முடி, எச்சங்கள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 41 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் 4 புலிகளின் நடமாட்டம் பதிவு ஆகி உள்ளது. பெண்ணை தாக்கிய புலியின் அடையாளத்தை காணும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் ஆதிவாசி மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்கவும், விறகுகளை சேகரிக்கவும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெப்பக்காட்டில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் கழிவறை கட்டிடங்கள் உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளும்படி ஆதிவாசி மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Reporter : G.ARAVINTHAN_Staff Reporter Location : Coimbatore - GUDALUR