முதுமலை-மசினகுடி சாலையில் புலி நடமாட்டம்


முதுமலை-மசினகுடி சாலையில் புலி நடமாட்டம்
x

முதுமலை-மசினகுடி சாலையில் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை-மசினகுடி சாலையில் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சுற்றுலா பயணிகள் ரசிப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் முதல் சிறு உயிரினங்கள் வரை வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனால் வனத்துறை சவாரி வாகனத்தில் பயணம் செய்தவாறு வனவிலங்குகளை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு சவாரியின் போது சில சமயங்களில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் புலிகளை கண்டு ரசிப்பது வழக்கம்.

ஆனால், பெரும்பாலும் வனப்பகுதியில் சிறிய உயிரினங்களை கூட காணாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவதும் உண்டு. இந்த நிலையில் தொடர் மழையால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது சீசன் நிலவுவதால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

சாலையை கடந்த புலி

இந்தநிலையில் முதுமலையில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு புலி ஒன்று கடந்து சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் சற்று தொலைவில் வாகனங்களில் இருந்தபடி கண்டு ரசித்தனர். சிறிது நேரத்தில் புலி வனப்பகுதிக்குள் சென்றது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி நடமாட்டம் இருந்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

காட்டு யானைகள், கரடி, புலி நடமாட்டம் சாலையோரம் அதிகரித்து காணப்படுகிறது. எனவேஇ சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது வாகனங்களை வேகமாக இயக்க கூடாது. மேலும் மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு வழங்க கூடாது. மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story