கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்ற புலி-கிராம மக்கள் பீதி
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கடித்துக் கொன்ற புலியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கூடலூர்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கடித்துக் கொன்ற புலியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கால்நடைகளை கொன்ற புலி
கூடலூர் தாலுகா சேமுண்டி பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை புலி கடித்துக் கொன்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோர புதர் அருகே புலி ஒன்று படுத்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சமயத்தில் புலியும் அங்கிருந்து எழுந்து புதருக்குள் சென்று பதுங்கியது. இந்த காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனிடையே நேற்று பகல் ஒரு மணி அளவில் புலி நடமாட்டம் தென்பட்டது. இதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதனால் பீதி அடைந்தனர்.
கிராம மக்கள் பீதி
தகவல் அறிந்த கூடலூர் தாசில்தார் சித்தராஜ், தேவர் சோலை வருவாய் ஆய்வாளர் உமா, கிராம நிர்வாக அலுவலர் நாசர் அலி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கூண்டு வைத்து புலியை பிடிப்பது குறித்து வருவாய்த் துறையினர் வனத்துறையினர் ஆலோசனை செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் இரும்பு கூண்டு வைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த் துறையினர் கூறும் போது, ஊருக்குள் புகுந்த புலிக்கு வயது மிகக்குறைவாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குட்டையில் நீர் அருந்த வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் கூண்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் அதைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.