தொடர் மழை, பனிப்பொழிவால் தரையில் சாய்ந்த நெல் பயிர்கள்


தொடர் மழை, பனிப்பொழிவால்   தரையில் சாய்ந்த நெல் பயிர்கள்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை, கடும் பனிப்பொழிவால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் தரையில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை, கடும் பனிப்பொழிவால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் தரையில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெல் பயிர்

தமிழகம் முழுவதும் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதுதவிர வடகிழக்கு பருவ மழையும் தீவிரமடைந்ததால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளது.

இதை பயன்டுத்தி விவசாயிகள் நடப்பாண்டில் முன்கூட்டியே விவசாய பணிகளை தொடங்கினர். சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் குறுகால நெல் சாகுபடி பயிரை பயிரிட்டு பாதுகாத்து வந்தனர்.

தரையில் சாய்ந்த பயிர்கள்

இந்நிலையில் திருப்புவனம், திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதியில் பயிரிட்ட நெல்பயிர்கள் தற்போது விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. திருப்பத்தூர், காரைக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழையும், கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் முற்றிலுமாக தரையில் சாய்ந்தது.

இதுகுறித்து திருப்பத்தூர் அருகே மேல்குடி பகுதியில் நெல் பயிர் பயிரிட்ட விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- எப்போதும் இல்லாமல் இந்தாண்டு பலத்த மழையும், கடும் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் காலை மற்றும் இரவில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.

அறுவடை செய்ய முடியாத நிலை

மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் முற்றிலும் ஈரப்பதத்துடன் தரையில் சாய்ந்து கிடப்பதால் தற்போது அறுவடை செய்ய முடியாமல் இருந்து வருகிறோம். இதற்கு மாற்றுவழியாக ஆட்கள் மூலம் அறுவடை செய்யலாம் என நினைத்தாலும் அறுவடை பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற கூற்றிக்கு தகுந்தாற்போல் தற்போது எங்களது நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story