திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் ரூ 25 லட்சத்தில் மக்கள் நல்வாழ்வு மைய கட்டிடம்
திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் ரூ 25 லட்சத்தில் மக்கள் நல்வாழ்வு மைய கட்டிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்
திண்டிவனம்
திண்டிவனம்-செஞ்சி சாலை சந்தை மேடு பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் மக்கள் நல்வாழ்வு மைய கட்டிடம் கட்டப்படுகிறது. கட்டிடம் கட்டப்படும் இடத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது அவரிடம் பத்திரப்பதிவு அலுவலகத்தை இங்குள்ள அரசு இடத்தில் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு புதிதாக ஒப்புதல் பெறப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வருவாய்த் துறையினர் நில அளவீடு செய்தபோது ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தற்போது உள்ளபடியே இருக்க வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு தாசில்தார் அளவீடு செய்தபிறகு அதுபற்றி பேசலாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரமணன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சீனி ராஜ், பாபு, சந்திரன், பார்த்திபன், ஒப்பந்ததாரர் நந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.