கார் மீது லாரி மோதி திண்டிவனம் தாசில்தார் பலி


கார் மீது லாரி மோதி திண்டிவனம் தாசில்தார் பலி
x
தினத்தந்தி 9 April 2023 9:54 PM IST (Updated: 9 April 2023 9:54 PM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் திண்டிவனம் தாசில்தார் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி, மகன் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா லட்சுமிபதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 52). இவர் திண்டிவனத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (48), மகன் சிவசங்கரன் (21). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் காலை காரில் காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். காரை சிவசங்கரன் ஓட்டினார். கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

லாரி மோதி பலி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி -காஞ்சீபுரம் சாலையில் செய்யாறு தாலுகா நெடுங்கல் கிராம கூட்ரோடு அருகே இரவு 9.45 மணி அளவில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த வெங்கடசுப்பிரமணியன் தலை, முகம் ஆகிய பகுதியில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் படுகாயம்

மேலும் அவரது மனைவி பூங்கோதை, மகன் சிவசங்கரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெங்கடசுப்பிரமணியனின் உறவினர் விக்னேஸ்வரன் அனக்காவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் தாசில்தார் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story