பூத்துக்குலுங்கும் சிறு குறிஞ்சி பூக்கள்
கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் சிறு குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.
குறிஞ்சி பூக்கள்
மலையும், மலை சார்ந்த இடங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களில் குறிஞ்சி மலர்களும் ஒன்று. கல்நெஞ்சம் கொண்டோரையும் கவர்ந்திழுத்து, கருணை உள்ளம் உடையோராய் மாற்றும் கொள்ளை அழகுக்கு சொந்தமானது இந்த குறிஞ்சி பூக்கள்.
இந்திய அளவில் 150-க்கும் மேற்பட்ட வகைகளும், தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே இந்த பூக்கள் பூத்துக்குலுங்குவது கூடுதல் சிறப்பு.
கடல் மட்டத்தில் இருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் குறிஞ்சி செடிகள் வளரும் தன்மை கொண்டது. ஒவ்வொரு வகை குறிஞ்சி பூக்களும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக்குலுங்குவது வழக்கம்.
நீலம், வெள்ளை நிறங்கள்
அதன்படி 6 வருடத்துக்கு ஒருமுறை சிறு குறிஞ்சியும், வருடத்துக்கு ஒரு முறை ஓடை குறிஞ்சியும் பூத்துக்குலுங்கும். 7 வருடத்துக்கு ஒரு முறை ஒரு வகை குறிஞ்சி பூக்களும் பூக்கின்றன.
அந்த வகையில், 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது சிறு குறிஞ்சி பூக்கள் தற்போது பூக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பூத்துக்குலுங்குகின்றன.மலைக்கிராமங்களில் உள்ள வயல் பகுதிகளிலும், பசுமை போர்த்திய மலைத்தொடர்களிலும், புதர்களிலும் இந்த பூக்கள் அதிக அளவில் பூத்துள்ளன. கண்களை கொள்ளை கொள்ளும் இந்த சிறு குறிஞ்சி பூக்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். நீலம், வெள்ளை நிறங்களில் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குவது குறிப்பிடத்தக்கது.