தைப்பூசத்தையொட்டிநடராஜர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்


தைப்பூசத்தையொட்டிநடராஜர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தைப்பூசத்தையொட்டி நடராஜர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

கடலூர்


சிதம்பரம்,

முனிவர்கள் பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரின் தவத்தை ஏற்று தைப்பூச நாளில் சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்ததாக நம்பப்படுகிறது. அதன்படி தைப்பூசமான நேற்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று மதியம் 12.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட முத்து, புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளான சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி 4 முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து சிவகங்கை குளத்தை வந்தடைந்தனர்.

பின்னர், நடராஜர் கோவிலில் ஆதிமூலநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் பஞ்ச மூர்த்திகள், முனிவர்களான பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான அஸ்திரராஜர் நீரில் மூழ்கி எழுந்து தீர்த்த காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சித் சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதநடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.


Next Story