திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மகேசுவரன். இவர் நேற்று திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தேங்காய் பழம் விற்பனை செய்தார். அப்போது அங்கு வந்த கோவில் அதிகாரி ஒருவர், மகேசுவரனை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்து அவரை தாக்கியதாக கூறி, மகேசுவரன் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பாக இந்து முன்னணியினர், கோவில் சிறு வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு வந்த இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், ''திருச்செந்தூர் கோவிலை அவமானப்படுத்தும் திட்டத்துடன் செயல்படும் அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்'' என்று கூறினார்.
இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் கார்த்திக் கூறுகையில், ''திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அறநிலையத்துறையின் அனுமதியின்றி எந்த பொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம். அதனை மீறி, தேங்காய் பழம் விற்பனை செய்தவரை போலீசாரிடம் ஒப்படைக்கவே தடுத்து நிறுத்தினோம். அவரை தாக்கவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.