திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்திஆதித்தனார் நர்சிங் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்திஆதித்தனார் நர்சிங் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருச்செந்தூர்:
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி செஞ்சுருள் சங்கமும், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி நம்பிக்கை மையமும், மருத்துவம் மற்றும் அறிவியல் சிகிச்சை துறையும் இணைந்து நேற்று திருச்செந்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தின. இந்த பேரணியை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் என்.கலைக்குருசெல்வி தலைமையில், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பாவநாசக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேல் ரதவீதி வழியாக மீண்டும் காமராஜர் சாலை வழியாக மீண்டு அரசு ஆஸ்பத்திரியில் நிறைவு பெற்றது.
பேரணியில், மாணவிகள் 'அறிவோம் அறிவோம் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றி அறிவோம்', 'காத்திடுவோம் காத்திடுவோம் விலைமதிப்பில்லாத உயிரை எய்ட்சிலிருந்து காத்திடுவோம்', 'தடுத்திடுவோம் தடுத்திடுவோம் எச்.ஐ.வி. தொற்றை தடுத்திடுவோம்', 'உருவாக்குவோம் உருவாக்குவோம் எய்ட்ஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்', போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு கோஷம் எழுப்பியவாறு சென்றனர். முன்னதாக டாக்டர் பாவநாசக்குமார் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் பென்னரசி, ஆசிரியர்கள் ஜினோ, ஸ்ரீபிரியா, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சம்மாள், டெய்சி, நம்பிக்கை மைய ஆற்றுனர் சாவித்திரி, ஆய்வக நுட்பாளர்கள் ஸ்டெல்லா, சுமதி மற்றும் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.