திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசித் திருவிழா கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் மாசித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் 9 சந்திகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தது. பின்னர் கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5.20 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கோமதி சங்கர் பட்டர் மாசித் திருவிழா கொடியேற்றினார்.

சோடஷ தீபாராதனை

தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜையில் வைக்கப்பட்ட கும்பத்தில் இருந்த புனிதநீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டது. வேதமந்திரம் முழங்க 'அரோகரா' கோஷத்துடன் சோடஷ தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்குவகை வேதங்கள், பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திரளானவர்கள் தரிசனம்

விழாவில் திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வஷித்குமார், திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமி, கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் கணேசன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டி நாடார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவில் யானைத்தந்த பல்லக்கில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரதேவருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளில் உலா வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தார்.

விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று, சுவாமி-அம்பாள் வீதி உலா

2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story