திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை நடந்த ஆனி வருசாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருசாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி வருசாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கும், குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்துக்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா
தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. காலை 8.55 மணிக்கு மூலவர் விமான கலசத்துக்கு வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை அம்மாள் ஆகிய விமான கலசங்களுக்கும் அபிஷேகம் நடந்தது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன்
இந்த வருசாபிஷேக விழாவில், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், குமரேச அதித்தன், ஜெயந்திர ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.