திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில்104 கடைகளுடன் வணிக வளாகம்:கலெக்டர்


தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் 104 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் 104 கடைகளுடன் வணிக வளாகம் அமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

பெருந்திட்ட வளாக பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி செலவில் பக்தர்கள் வசதிக்காக பெருந்திட்ட வளாக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல் கோவிலில் மகா கும்பாபிஷேக பணிகளும் நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில்,

பெரிய அன்னதானகூடம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக குடிநீர்த்தொட்டி, நிர்வாக கட்டிடம், சுகாதார வளாகம், காத்திருப்போர் அறை, வரிசைப்பாதை, முடிகாணிக்கை செலுத்தும் மண்டபம், திருமண மண்டபம், கலையரங்கம் உள்ளிட்ட பணிகளில் 70 முதல் 80 சதவீதம் நடைபெற்றுள்ளது. 2-ம் கட்டமாக கோவிலுக்கு தரை வழியாக மின் தடம் அமைக்கப்படவுள்ளது. பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே உள்ள 220 சுகாதார வளாகங்கள் அதிகரிக்கப்பட்டு, 480 சுகாதார வளாகங்களாக கட்டப்படும்,

தற்போது திருவிழாக்காலங்களில் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புதிதாக 600 பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் அன்னதான கூடம் அமைக்கப்படவுள்ளது. பெருந்திட்ட வளாகப்பணிகளின் போது வளாகத்தில் உள்ள மரங்கள் அகற்றப்படாமல் கட்டிடங்கள் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்படுகிறது. இதில் 104 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.

கழுவுநீர் மறுசுழற்சி

பக்தர்கள் வசதிக்காக தரைத்தளத்தில் மூன்றும், முதல் தளத்தில் ஒன்றும் என 4 காத்திருக்கும் அறைகள் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் 2400 பக்தர்கள் அமரும் வகையில் வசதி செய்யப்படவுள்ளது. இது கிரிப்பிரகாரத்தில் தேர் உலாவுக்கும், பக்தர்கள் வள்ளி குகைக்கு செல்வதற்கும் எந்த இடையூறும் இன்றி செய்யப்படவுள்ளது. கோவிலிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மறு சுழற்சி செய்து கழிவுநீரை நகராட்சி பாதாள சாக்கடைத்திட்டத்தின் மூலம் வெளியேற்றப்படும். அதேபோல் பூமிக்கு அடியில் (சம்ப்) 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த்தொட்டி அமைக்கப்படும். பெருந்திட்ட வளாகப்பணிகளில் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர அடியில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளில், தற்போது 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெறுகிறது.

புறவழிச்சாலை

திருச்செந்தூர் கோவிலுக்கு தனியாக புறவழிச்சாலை அமைப்பது குறித்து திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. இச்சாலை மூலம் பக்தர்கள் ஊருக்குள் வராமல் கோவிலுக்கு நேரடியாக வந்து செல்லலாம். இப்பணியும் பெருந்திட்ட வளாகப்பணிகளுடன் நிறைவு பெறும்.

கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 7 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் மற்றும் சுகாதார வளாகங்கள் அமைக்கப்படவுள்ளது.

உடன்குடியில் தூய்மைப்பணியாளர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் நகராட்சியில் வரி உயர்வு குறித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து விரைவில் நகராட்சியில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையர் வேலவன், யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, கோவில் செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் அழகர்சாமி, இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story