திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனர்.
ஆடி திருவிழா
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை நடைபெற்றது. மதியம் 1.15 மணியளவில் அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அவதாரபதியைச் சுற்றி தேரில் பவனி வந்த அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் அய்யா வைகுண்டருக்கு சுருள் வைத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவில் அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியைச் சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திரளான பக்தர்கள்
விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், செயலாளர் பொன்னுத்துரை, துணைத்தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் சுதேசன், சீனிவாசன், முத்துக்குட்டி, டி.பாலகிருஷ்ணன், கோவை ஹரிராமன், சிவாஜி, வினோத், கண்ணன், கே.டி.எம்.செல்வகுமார்,
தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் ஓடை சுகு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.