திருச்செந்தூர்அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடி திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது.
தொடர்ந்து கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடிமரத்தை 5 முறையும் சுற்றி வலம் வந்தது. காலை 7.10 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் திருவிழா கொடியேற்றினார்.
அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி
பின்னர் புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலையில் உகப்படிப்பு, பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வக்ஷித்குமார், அன்பாலயம் நிறுவனர் ஸ்ரீகுரு சிவச்சந்திரன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், செயலாளர் பொன்னுத்துரை, துணைத்தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, முத்துக்குட்டி, த.பாலகிருஷ்ணன், செல்வகுமார், ஆதிநாராயணன், ரத்தினபாண்டி, ஹரீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
31-ந்தேதி, தேரோட்டம்
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 11-ம் திருநாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.05 மணிக்கு நடக்கிறது.